“அஜித் கிரேன் தள்ளுவார்!”

சினிமாவில் ஒரு காட்சியைப் பறந்து பறந்து படம் பிடிக்க வேண்டும் என்றால் கிரேனும் அதை இயக்கும் ஆபரேட்டர்களும் ரொம்ப ரொம்ப அவசியம். அப்படி ஒரு கிரேன் ஆபரேட்டரான பாபுவைச் சந்தித்தேன்.

‘‘முதல் முதலா 1997-ல் நான் இந்த வேலைக்கு வந்தேன். அதற்கு முன் பஸ் கண்டக்டராக இருந்தேன். கிரேன் மேனா என்னுடைய 19 வருட சினிமா அனுபவத்தில் முன்னணி நடிகர்கள் பலருடைய படங்களில் வேலை பார்த்துட்டேன். குறிப்பா ‘சிவாஜி’, ‘வேதாளம்’, இந்தியில் ஷாரூக் கான் படங்கள்னு நிறைய சொல்லலாம். மொத்தமா 300 படங்களைத் தாண்டிட்டேன். ஒரு காட்சி நல்லா வரணும்னா கிரேன் ஆபரேட்டருக்கும் கேமராமேனுக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும். அப்போதான் நினைச்ச மாதிரி சீன் எடுக்க முடியும். இப்படி கேமராவுக்குப் பக்கத்திலேயே நின்னு கிடைச்ச அனுபவத்துல கிட்டத்தட்ட நானும் கேமராமேனாகிட்டேன். ‘கோ’ படத்தில் டிரைவராகவும், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் இன்ஸ்பெக்டர் கேரக்டரிலும் நடிச்சிருக்கேன். அந்த வாய்ப்பு அவங்களே கொடுத்தாங்க. இப்போ சொந்தமா நாலு கிரேன் வெச்சுருக்கேன். என்கிட்டே 40 பேர் வேலை பார்க்கிறாங்க. தினமும் யார் எந்தப் படத்திற்குப் போகணும்னு பிரிச்சு அனுப்புவேன். நானும் அவங்களோடு போவேன். சமீபத்தில் ரிலீசாகியிருக்கும் கார்த்தியின் ‘தோழா’ படத்துக்குக்கூட 30 நாள் ஜெனிவா போயிட்டு வந்தேன்’’ என்று அறிமுகம் கொடுத்தார் பாபு.

‘‘கிரேன் ஆபரேட்டர் தொழிலில் எப்போதும் வேலை இருக்கும்னு சொல்ல முடியாது. அதே மாதிரி இதை நிரந்தரமான வேலைனும் சொல்ல முடியாது. ஒரு கிரேனை இயக்க ஆறு பேர் தேவை. கிரேன் மேனுக்குனு இருக்கிற மிகப்பெரிய பிரச்னை அதைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இடமா கொண்டு போய் சேர்க்கிறதுதான். ஒரு கிரேன் மேனா எனக்கு சவாலா இருந்த படம்னு சொன்னா ‘பிதாமகன்’தான்.அந்தப் படத்துக்காக உயிரைக் கொடுத்து வேலை பார்த்திருக்கேன். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் எல்லாமே மூவ்மென்ட் ஷாட்தான். அதுக்காக கடுமையா உழைச்சிருக்கோம். அதே மாதிரி ஷாரூக் கானின் ‘தில்சே’ படத்தை சொல்லாம். நாங்க படுற கஷ்டம் யாருக்குத் தெரியுமோ இல்லையோ ஹீரோ, ஹீரோயின்களுக்கு நல்லாத் தெரியும். அப்படி விக்ரம் சார், அஜித் சார் எல்லாம் ஸ்பாட்ல எங்களோடு சேர்ந்து கிரேனைத் தள்ளி ஹெல்ப் பண்ணியிருக்காங்க. ஹீரோயின்கள் ஷாட் முடிஞ்சதும் கிரேன் மேல ஏறி உட்கார்ந்துக்கிட்டு ஜாலியா ரவுண்டடிச்சு விளையாடுவாங்க. அது யாருன்னு மட்டும் கேட்காதீங்க. வீட்டுக்குள்ளே ஷூட்டிங் நடக்கும்போது ஏழு அடி கிரேனைப் பயன்படுத்துவோம். அவுட்டோர்ல யூஸ் பண்றது 18 அடி கிரேன். 40 அடி கிரேனை பிரமாண்டமான சீனுக்குப் பயன்படுத்துவோம். இப்போ லாரன்ஸ் நடிக்கும் ‘மொட்டை சிவா கெட்ட சிவா’, ‘ஜெயம்’ ரவியின் ‘போகன்’, ஜீ.வி பிரகாஷ் நடிக்கும் ஒரு படம்னு நல்லாப் போய்க்கிட்டிருக்கு. என் படத்துக்கு பாபுதான் வேணும்னு பலர் அடம்பிடிக்கிற அளவுக்கு டெவலப் ஆகியிருக்கேன். அதுவே போதும்’’ என்றார்!

-ஜுல்ஃபி, படம்: பா.காளிமுத்து

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick