விழா  எடுத்துப்பார்...  

                            

      

      அவரது குடும்பத்தினர் ஊரில் கவலையில் இருக்க, குவைத்திலிருந்து அவரை எப்படியும் அழைத்துப்போக வேண்டும் என்று அவரது மகன் மிகுந்த பிரயாசைபட்டார்.

   மூன்றாம் நாள் மீண்டும் ஜெய் `மறுபிறப்பு’ எடுக்க விஜய் தனது `ரிஸ்கில்’ அழைத்துப் போய் அவரை அப்பல்லோவில் அட்மிட் பண்ணி சிகிச்சையை தொடரவேதான் குவைத் தமிழர்களுக்கு நிம்மதி.

   ஜெய்-ஜாலியானவர் எப்படியோ அமர்க்களமாய் நடக்க வேண்டிய அவரது நிகழ்ச்சி-வேறு மாதிரி ஆகிவிட்டதில் அனைவருக்குமே தர்மசங்கடம். சென்னைக்கு சென்றதும் சில வாரங்களில் அவர் இயற்கை எய்தியது குவைத் தமிழர்களுக்கு பேரதிர்ச்சியாயிற்று.

       கிரேஸிமோகன்:

  எஸ்.வி.சேகருக்கு அடுத்தபடியாக நாடக உலகில் வெற்றிக்களிப்பில் இருக்கும் கிரேஸியை தனி மனிதனாக (ஒத்தைக்கு ஒத்தையாக) பார்க்க முடிவதில்லை. மேடையில் அவர் பிரதர்சனம் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவரின்றி அந்த குழு இல்லை.

   சேகரின் நாடகத்தில் அவர்தான் பிரதானம். அவருக்காகவே நாடகம்! ஆனால் கிரேஸின் குழுவில் அவருடன் சேர்ந்து நான்கைந்து பேர்களும் வந்தாக வேண்டும்.

    பாரதிகலை மன்றத்திற்கு நாடகம்போட குவைத் வந்த போதும் கூட அவர்கள் அப்படித்தான். நானோ பாலாஜியோ தனியாக வர இயலாது. எங்களின் கதாபாத்திரங்களை வேறு யார் செய்தாலும் சரியாக இருக்காது. அதனால் எங்கள் ஐந்து பேருக்கு டிக்கட் விசா எடுத்தால் மட்டும் வர இயலும் என்று விட்டனர் கறாராய்.

   அவர்கள் ஜாலி டைப் என்றாலும் கூட, கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கறார். பட்ஜெட்டை அனுசரித்து நான்கு பேருக்கு மட்டுமே டிக்கட் தர இயலும் என்றதும், ``சரி பரவாயில்லை. பஞ்சபாண்டவர்களான எங்களை பிரிக்கும் பஞ்சமா பாதக பழி பாரதிகலை மன்றத்துக்கு வேண்டாம். ஐந்தாவது நபருக்கும் விசா தாருங்கள். டிக்கட் நாங்களே எடுத்துக் கொள்கிறோம்’’ என்றார்.  

    சொன்ன மாதிரியே ஒரே குடும்பமாய் வருகின்றனர். செயல்படுகின்றனர். பாரதி கலைமன்றத்தின் துணை தலைவி தன் வீடருகிலேயே இடம் பார்த்து, அவர்களை தங்க வைத்திருந்தார். அவர்கள், தங்களுக்கு ஹோட்டல்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை. ரொம்ப யதார்த்தம்!

   கிரேஸி பாய்ஸ் ஜோவியல் மட்டுமில்லை-பழகும்போது ஒரு அன்யோன்யம்! வாழ்க்கையில் கவலையேயில்லாததுபோல வெளியே எப்போதும் ஒரு சாந்தம்! கமுக்கம்!.

   அவர்களுக்குள் உள்ளுக்குள் என்ன பிரச்சனையிருந்தாலும் வெளியே தெரிவதில்லை. எந்த விஷயத்திற்கும் முகம் சுளிப்பதில்லை. முரண்டு பண்ணுவதில்லை.

    சாப்பிட அழைத்தால் அப்படியே, சொந்த வீட்டிலிருப்பது போல டிராயர் பனியனுடன் (பெர்முடாஸ்!) எழுந்து வந்துவிடுவார்கள்.

    சாப்பிட்டு முடிந்ததும், அவரவர்கள் பாட்டிற்கு போய் ஹாயாய் தூக்கம்!’’ என்ன இப்படி தூங்கறதுக்கா குவைத் வந்தீங்க?’’ என்று கேட்டால், ``இந்த மாதிரி தூக்கம் சென்னையில் எங்கே கிடைக்கிறது-எங்கே அதுக்கு நேரம்! சம்பளத்தோடு சாப்பாடும் தூக்கமும் தந்திருக்கீங்களே... ரொம்ப நன்றி’’ என்று சிரிக்கின்றனர்.

  கிரேஸிக்கு பர்ச்சேஸிலோ, ஊர் சுற்றிப் பார்க்கணும் என்பதிலோ பெரிய அளவில் `கிரேஸ்’ இருப்பதாய் தெரியவில்லை. ஒவ்வொரு பொருளை பார்க்கும்போது நம் ஊர் பணத்திற்கு கணக்கு பார்த்து அவசியமானதை மட்டுமே தொடுகின்றனர்.

       அதே மாதிரி வாங்கின பொருளிற்கு விலை ஸ்பான்சரின் தலையில் கட்டுவதில்லை. அனைத்தையும் கணக்கில் வைத்து நாடக சம்பளத்தில் கழித்து விடுகின்றனர்.

   தள்ளியிருக்கும்போது –ரிசர்வ் டைப்பாக தெரிந்தாலும் பழகினபின்பு பார்த்தால்-கடிமன்னர்கள்! பேச்சில் நகைச்சுவையுடன், ஒரு தோழமை, பிறரின் கருத்துக்களுக்கும் காதுகொடுக்கும் தன்மை, அடுத்தவர்களின் மனம் கோணாதபடி விஷயத்தை பக்குவமாய் எடுத்துரைத்தல் என்ரு இவர்களிடம் பல் ப்ளஸ் பாயிண்ட்கள்!.

    நாடக ரிகர்சலில், லோக்கல் கலைஞர்கள் தப்புசெய்தாலும் இவர் கோபப்படுவதில்லை. தப்பாய் பண்ணுபவரை ஒரு ஓரமாய் தள்ளிக் கொண்டு போய், கட்டிபிடித்து, கும்பிட்டு, தட்டிக்கொடுத்து, ``இப்படி இல்லேம்மா-இப்படி பண்ணணும்!’’  என்று கூலாக எடுத்துரைத்து நெகிழ வைப்பார்.

   அவற்றை மீறி மேடையில் தவறு நடந்தாலும் பெரிதுபடுத்துவதில்லை.

   சிலரை அழைத்து வந்து நிகழ்ச்சி முடித்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். புக் பண்ணும்போது ``என்னை அழைத்தால் போது-வேறு எதுவுமே வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு, வந்தபின்பு செலவுக்கு மேல் செலவாக வைத்து, காலி பண்ணிவிடுபவர்கள் உண்டு.

   ``ஆனால் கிரேஸி அந்த ரகமில்லை. குவைத்தில் என்றில்லை-சென்னையில் அவரது வீட்டிலும் சரி, என்றும் அன்பான –கலப்படமில்லா பாசம்! அந்த பொய் கலக்காத நேசம் பிடித்தமான ஒன்று’’  என்று உருகுகிறார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஆனந்தி நடராஜனும், நடராஜனும்.

       சாலமன் பாப்பையா:

   சாலமன் பாப்பையா அவர்களும் கூட குறுகிய கால இடைவெளியில் தேதி கொடுத்து இரண்டு நாளில் திரும்பி போய்விட்டார். ஊரில் வேறு நிகழ்ச்சி இருந்ததால்-குவைத்  உபசரிப்பை முழுதாய் அனுபவிக்க முடியாமல், முழுதாய் சுற்றிப் பார்க்க முடியாமல் `கனவு போல ஊர் திரும்ப வேண்டியுள்ளதே’ என்று வருத்தப்பட்டார்.

  பட்டிமன்றத்தை எளிமைப்படுத்தி பாப்புலர் ஆக்கினதில் முதலிடம் இவருக்குண்டு. வயது, தலைமுறை வித்தியாசம் பார்க்காமல், தோளோடு தோள் அரவணைத்து பேசும் எளியவர்.

   பட்டிமன்றம் என்பது இன்னொரு பணம் பண்ணும் தொழில் என்று ஆகிவிட்ட இன்றைய நிலவரத்தில், இவர் சற்று மாறுபட்டவர். சினிமாகாரர்களும் சரி, பட்டிமன்ற கலைஞர்களும் சரி ஓரிடத்திற்கு போகிறார்கள் என்றால் ரேட் பேசும்போது ஒரு நாள் நிகழ்ச்சி என்றால் இவ்வளவு –இரண்டு நாள் என்றால் இவ்வளவு என்று கறாராக பணம் பேசிவிடுவார்கள்.

  அதில் பாதி தொகையை அட்வான்சாக தந்தால்தான் அக்ரிமென்டே போடுவார்கள். (நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு பணம் தராமல் ஏமாற்றிவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு)

   ஆனால் இவர் ஜெம். ரொம்ப டீசண்ட், ரேட் விஷயத்தில் கெடுபிடி பண்ணவில்லை. கொஞ்சங்கூட அலட்டலில்லாமல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருமதி ஆனந்தி நடராஜனின் வீட்டிலேயே தங்கினது மட்டுமன்றி, மிகுந்த ஒத்துழைப்பும் தந்தார்.

   அது மட்டுமன்றி கேம்பகளில் தங்கியிருக்கும் தொழிலாளர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அவர்களுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்று அவர்களுக்காகவும் இன்னொரு பட்டிமன்றம் நடத்தவும் செய்தார்.

   அதற்காக தனியாக பிரதிபலன் எதுவும் கேட்கவில்லை. அதிலும் சொல்லப்போனால்-எந்த நிகழ்ச்சிக்காக வந்தாரோ –அந்த நிகழ்ச்சிக்கு முதல் நாள்-இலவச நிகழ்ச்சி நடந்தது. அதில் ரசிகர்களுக்கும் சந்தோஷம் தொழிலாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

    நாடகம் போலவே –சாலமன் பாப்பையா நடுவராக இருக்க, பேச்சில் கலந்துக் கொள்பவர்கள் உள்ளூர் பேச்சாளர்கள்! தலைப்பை மட்டும் சாலமன் தந்துவிட்டார். ரிகர்சல்கூட பார்க்கவில்லை.

   பட்டிமன்ற பேச்சாளர்கள் போலவே உள்ளூர்வாசிகள் பேச-சாலமன் பாப்பையா- நகைச்சுவையுடன் பேசி சமாளித்தார். தனியார் டி.வியில் அவர் தினசரி நிகழ்த்தும் உரை-கடல் கடந்து மக்களை சென்றடைவதில் அவருக்கு பெருமிதம்.

   ``தமிழை கொச்சையாக –நடைமுறை பாஷையில் பேசுகிறீர்களே...?’’ என்று கேட்டால்-

    ``அதில் என்ன தவறு? முன்பெல்லாம் தமிழ் என்றாலே மாணவன் அலறுவான், ராமாயணம், மகாபாரதம் என்று வெகுஜன மக்களுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருந்தார்கள். அதனால் தமிழ் வளராமல், அதன் சிறப்பு வெளிப்படாமல் இருந்தது.

   தமிழின் சிறப்பை எளிமைப்படுத்தி –அடிமட்ட மக்களும் புரிந்துக் கொள்ளும் அளவில் பேசுவதால் எல்லோரும் ரசிக்கிறார்கள். பொது ஜனத்திடமும் நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை எளிதாய் கொண்டு போய் சேர்க்க முடிகிறது.

   நாம் என்ன சொல்கிறோம். என்ன கருத்துக்களை சொல்கிறோம் என்பதுதான் முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது இரண்டாம் பட்சம்’’ என்கிறார் சிரித்தபடி.

    சாலமன் பாப்பையா, குவைத் இந்திய தூதரக அமைச்சர் கருப்பையாவை சந்தித்து, பழந்தமிழ் குறித்து ஆழமாய் விவாதிக்கவும் செய்தார்.

   சாலமன், குவைத்திற்கு வரும்போது விமானத்தில் முதல் வகுப்பில் வந்தார். ``அதற்கு முன்பு இரண்டாம் வகுப்பில் மட்டுமே பயணம் செய்திருந்த எனக்கு அந்த உபசரிப்பும், அணுகுமுறையும் வித்தியாசமாய் இருந்தது. அங்கே வேட்டிகட்டி இருந்த ஒரே ஆசாமி நான்தான். கிராமத்து ஆள் என்று எல்லோரும் வித்தியாசமாய் பார்த்ததை என்னாலும் உணர முடிந்தது. அடப் போங்கப்பா –என்று நானும் மற்றவர்களை அலட்சியப்படுத்திவிட்டேன்’’ என்று யதார்த்தமாய் வெகுளியாய் விவரித்தார் பட்டிமன்றத்தார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடு ; பாரதிகலை மன்றம்.

      நடிகர் நெப்போலியன்:

  குவைத்தில் நூற்றுக்கு மேற்பட்ட இந்திய அமைப்புக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் நிகழ்ச்சி நடத்த வேண்டி ஸ்பான்சர்களுக்காக போட்டிப் போடுவதால் இங்கே எப்போதுமே ஸ்பான்சர்களுக்கு பஞ்சம்.

   இந்த நிலையில் கலைஞர்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவது சமயத்தில் அசோசியேஷன்களுக்கு சிரமமாயிருக்கும்.

  கலைஞர்கள், மேடையில் Perform  பண்ணினால் மட்டுமே சன்மானம் பேசுவார்கள். நிகழ்ச்சிக்குத் தலைமைதாங்க வருபவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படுவதில்லை. வருபவர்களின் டிக்கட்-விசா-ஹோட்டல்-சாப்பாடு-பரிசு என்று அதுவே நல்லதொகை வந்துவிடும்.

   பாரதி கலைமன்றத்தில் அப்போது தலைவராக இருந்த செந்தமிழ் அரசுவும் செயலாளர் சாக்ரடீசும் ``பாரதிகலைமன்றத்திற்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சி நடத்தலாம் என்றிருக்கிறோம். உங்களது செல்வாக்கில் சினிமா நட்சத்திரங்களை ஏற்பாடு செய்து தாருங்கள்’’ என்று என்னை அணுகினர். (இது 1999).

   நானும் விடுமுறைக்கு சென்னை வந்தபோது, அவர்களுக்கு வேண்டி பல நட்சத்திரங்களையும் சந்தித்து பேசினேன். இவர்களின் சின்ன பட்ஜெட்டிற்கு பிரபல நட்சத்திரங்கள் ஒத்துவரவில்லை. சிலருக்கு தேதியில்லை.

   ``சரி, கலை நிகழ்ச்சி வேணாம். சிறப்பு விருந்தினராக யாரையாவது ஏற்பாடு செய்யுங்கள்” என்றனர்.

   அந்த நேரம் (டிசம்பர்-2) தனது பிறந்த நாளிற்காக குடும்பத்துடன் துபாய் செல்லவிருந்த நெப்போலியன் சிக்கினார். அவர் எனது நீண்ட நாள் குடும்ப நண்பர். அவரிடம் விபரம் சொல்லி ``சன்மானம் எதிர்பார்க்காமல் வரணும். உங்கள் பிறந்த நாளை குவைத்தில் ரசிகர்களின் முன்னிலையில் கொண்டாடலாம்! அதன்பிறகு அப்படியே நீங்கள் துபாய் செல்லலாம்’’ என்றதும் சம்மதித்து வந்தார்.

   இதே மாதிரி ஜனவரி 2000 பொங்கல் விழாவிற்கு வரதராஜன் –நித்தியாவின் நாடகத்தை ஏற்பாடு செய்துவிட்டு,``அதற்கு சிறப்பு விருந்தினராக டைரக்டர் பாரதிராஜா அவர்களை எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுங்கள்’’ என்று அவர்கள் என்னிடம் கேட்டனர்.

   சரியென்று நண்பர் வண்ணப்பட யோகா அவர்களிடம் விபரம் சொல்லி, டைரக்டரை எப்படியாவது சம்மதிக்கவைத்து அழைத்து வர வேண்டியது உங்கள் பொறுப்பு’’ என்றேன்.

   எனது வேண்டுகோளை அவரால் தட்ட முடியவில்லை. பாரதிராஜாவின் மனநிலை அறிந்து அவரை சம்மதிக்க வைத்து யோகா அழைத்து வந்தார். அந்த விபரம் வேறு பக்கங்களில்..?

    நெப்போலியன் நிச்சயம் யோக காரராகத்தான் இருக்கவேண்டும். கடல் கடந்து வந்து பாரதிகலைமன்ற மேடையில்  பிறந்த நாள் கொண்டாடுவது  ஒரு பாக்யம் தானே!

    ஆஜானுபாகுவாக இருந்தாலும்கூட நெப்ஸிடம் எப்போதும் புன்னகை மாறா முகம். சகஜமாகவும், கிராமத்து வாசனையுடனும் பேசுவது அவரது சிறப்பு. சட்சட்டென வரும் கோபம் மைனஸ்பாயின்ட்.

   அவர் நடிக்கர் என்பதால் அவரது சமுதாயத்தில் பெண் கொடுக்க பலரும் முன்வராத விஷயம் எனக்குத் தெரியும். நடிகன் –நடிகைகள் பக்கம் தாவி விட்டால் தங்கள் பெண்ணின் கதி என்னாவது என்கிற பயம்.

   அதையும் மீறி கல்யாணம் செய்துக்கொண்டவர், ``தான் நடிகன்தாண்டா ஆனா என் மனைவிக்கு விசுவாசமா இருக்கேன். அவளை மகாராணி மாதிரி வச்சிருக்கேன். பாருங்க!’’ என்று நெப்ஸ் காலரை தூக்கிவிட்டுக் கொள்வார்.

 

  

cineprofiles/kangal-kalangiya-pothuinclude.htm

பக்கம்

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15

தொடரும்

More Profiles